Sunday, January 13, 2013

மைனஸ் ஒன்று (-1)



மரணத்தைக் காணாதவரை புத்தன் ராஜாதான்.

பார்வையிலிருந்த நூலாம்படையை நரம்புக்கும் நூலுக்கும் குழப்பமானமுறையில் சிக்கியிருந்த மரணத்தை முரட்டுக் கரங்களால் திசையின் ஒவ்வொரு கோணத்திற்குமாகப் பிய்தெறிந்தபின் கண்களைத் தேடி அலையும் பாடலின் வரியைப் பற்றிக்கொள்கிறது மனம். 

அடுத்தச் சொல்லின் நேர்குறுக்குச் சிதைவுக்குள் பொருளையும் மடக்கி மடக்கி அர்த்தங்களின் அர்த்தத்திற்கும் அநர்த்தத்தின் சாயலைப் பொத்தி வைத்து, வாழ்க்கையை வாரிச்சுட்டி மோப்பத்தை வெறியேற்றுகிறது மரணம்.

அப்பா எப்போதும் போல் தூங்கிக் கொண்டிருக்கிறார். 90 வயதைத் தொட்டிருக்கலாம், ஜூன் வரை இருந்திருந்தால். 

கணக்கின் முழுமையால் உடல் படபடக்கிறது. ஐயோவெனக்கூவ வெட்கப்பட்டுக் கர்ச்சிப்பால் கண்ணீரை அவமானத்தோடு தொட்டுத்தொட்டு நினைவுகளைப் பிழிகிறேன். உடன்பிறந்தார், உற்றார் உறவினர், நண்பர்குழாம், காக்கைகளும் குருவிகளும், இரண்டு நாய்களும், பூனையுமாக ஊதுபத்தி மனத்தில் குழந்தைகள் விளையாட்டும் விளையாட்டில் கூச்சலில் அவர் மறந்துவிட்டுப்போன குரல் சேர்ந்து விளையாடிப் பூச்சாண்டிக் காட்டிக்கொண்டே இருந்தது, 

தலையில் சில்லென்றக் குடத்து நீர் மொத்தமாக என்னைக் கழுவிக்கடந்தது.

முழுதுமாக நனைந்துவிட்டேன்.
12.01. 2013

இனி ஒரு பொழுதும்
மரணம் 
என்னை ஒன்றும் செய்யாது.

எங்கள் வீட்டின் முதல் மரணம்.

மைனஸ் ஒன்று (-1)

அப்பா

Thursday, December 13, 2012

பெயர் ஏற்காமல் போனவன்


மரணம்,
ஆழ்கடல் முத்தொன்றில்
மறைந்துவாழும்
வஸ்த்து.

இடவலமாகச் சீட்டுக்கட்டில்
இடம்மாறி உட்கார்ந்ததும்
ரம்மி சேர்ந்து
ஆட்டத்தை முடித்துவிடும்
உயிர்.

அடுத்த ஆட்டத்திற்கு
அடுத்த ஆள்

யார்க்கும்
மறுவாய்ப்புக் கிடையாது.

சுற்றி அழுவோரின்
கதறலுக்கிடையில்
இசையொன்றுப் பிரவாகிக்கும்.

பெருந்தாய்
ஆத்திரார்த்திரமாக மாரடித்துக்கொள்ளும்
தாலாட்டு

நானும்
பெருங்கிளையொன்றிலிருந்து
மொட்டவிழாச் சிறுதளிராய்த்
தரைக்குத் தாழ்வேன்.

ஏந்தியக் கரங்களுள்
வெப்பம்

என் மனசெல்லாம்
கன்னிப்போன காயங்கள்.

பகிர்ந்துகொள்ள
உன்னையன்றி
இனி
தாயையும்
அணுகமுடியாத நடுக்கம்

அம்மா!

வாழ்ந்திருந்தால்

ஏதோவொரு கவிதையில்
நல்லவொரு சொல்லாக

வரையப்பட்டிருந்தால்
மனதை வருடும்
வண்ணக் கீற்றாக

வாய்ப்பறுந்து கிடக்கிறேன்

நான் அண்டச் சராசரத்தை ஆளும் வஸ்தாகிறேன்
வங்கக்கடலுக்கிடப்பட்ட மையாக

விஷநீலம் மையிருளில்
நிறப்பிறழ்வின்
குழப்பத்திலேயே

உங்கள் எல்லோருக்கும்
உலகப்பெயரேற்காதப்
பொய்யாகி
அர்த்தமற்றக் கனவாய்க் கலைகிறேன்

நான்

சின்ரெல்லாவின்
சிசு.
12.12.12
(இந்த நாளைப்போல் திரும்பவராதக் காலமாகிறேன்.)

Friday, December 7, 2012

கறந்தபால் மடிபுகா


ஞாபகத்திலிருந்த மழைத்தூரலில் நனைந்து
ஓவென அரற்றிப் பிறட்டியப் பெருமழையில் கரைந்தோடியது
ஒரு குடிசை.

கதவும் சிறுகுச்சிச் சன்னலும்
பக்கவாட்டில்
பத்தடியாகத் தள்ளி
மண்ணில் புதைந்திருந்தது
பாதியாக.

காலம் ஒன்றும்
சும்மா இல்லை.

சில்லென்றக் காற்றில்
உயிர் கொண்டு வந்தவொருக் குருவி
கனவைத்திறந்து பூமிக்கு உதிர்த்தது
இப்போ முளைத்திருக்கிறது.

பசுமையாய்
புதுவாடைகொண்டு.

பெரியவர்கள்
சிறியவர்கள்
நடுத்தர வயதினர்
தள்ளாத பெரியோர்

கும்பலில்
யார் பேசுவது?

எல்லோரும் பேசுகிறார்கள்.
            “போன மழையிலொருக்
            குடிசை அடித்துச் சென்றது.
பள்ளிச் சிறுவர்கள் வேடிக்கைப் பார்த்தனர்
பல்லில்லாத கிழவரொருவரும்
சலேஸ்வரக் கண்ணால் கண்டார்

தளிர்
மெல்லத் தலைதூக்கியது.

படபடக்கும் நெஞ்சில் கைவைத்து
பதிவான ஒரு பாடலைப் பாடியது

‘கறந்தபால் மடிபுகாது
என் மக்கா...!’

 ***

சின்ரெல்லா மெல்லியப் புன்னகையோடு
பிள்ளையைத் தடவிக் கொடுக்கிறாள்.

பிரஷர் குறைந்துவிட்டது.
உலகில் தனக்கென ஒரு கிளை.
ஆரவாரத்திற்கிடையில்
ஜென்மாந்திரமாகக் தொடரும் ஒரு உறவு
அந்துவிழும் இலைகளால்
அயர்ந்து ஓயப்போவதில்லை இனி.
ஆகாயத்திற்குச் சொந்தக்காரியாகிறாள்
சின்ரெல்லா.

அரியநாச்சி
7.12.2012

Friday, November 16, 2012

சின்ரெல்லாவுகுச் சீமந்தம்

நெல் விளைந்த நிலம்
நீராகப் பரவியக் கடல்
உயிர்
திரட்சிக்கொள்ளும் வெளி

அப்போ,
யாருமற்ற வானில்
வட்டமாக, வெள்ளையாகச் சின்ரெல்லா.
கதிர், சூல்கொண்ட புதிர்.

ஒருமுறைத் திறந்துவிட்டால்
மூச்சில் தஞ்சம், உயிர்

அதிரும் உடலில்
படபடக்கும் நெஞ்சம்.
சுகரும் பிரஷரும்.

கருகொள்ளவும் மருத்துவமனை
பேறுவுக்கும் அங்கேயே
வீடென்பது வீடாகவா!?
கருவிற்கொரு இடமாகவா?!
உறவிற்கொரு இதமாகவா!?
சின்ரெல்லாவுக்கு மருத்துவமனை.

(சின்ரெல்லாவிற்கு, மஞ்சள் காமாளை, தைராய்டு, பிரஷர் என என்னென்னவோ சொல்கிறார்கள்.)

அழகில் மயங்கிய மாப்பிள்ளை
புதிதில் தடுமாறினாள், சின்ரெல்லா

இருவரும்
ஆண் பெண்,
பெண் ஆண்
அவ்வளவுதான்!

இடையில் புகுந்த நரிகளின் ஊளை
தூங்குமூஞ்சிகளின்
கண்களில் ஊளை.

எல்லாம் மறைக்கப்பட்டது
எதுவும் தென்படவில்லை.

சீமந்த நெறுக்கடியில்
பெண் வீட்டார்
மாப்பிள்ளை வீட்டார்
அங்கே
இங்கே
எங்கும் பிள்ளைகள்

வளர்ந்தப் பெருசுகளின்
வளராதப் பெருந்தன்மை

பணம் துரத்தும் பெருசுகளாய்
வாய்திறந்தலையும் ஓநாய்களாய்
எச்சில் தெரிக்கப் பேசிவிட்டு
நலுங்குக்கூட்டத்தில்
ஒரு ஊளைச் சப்தம்

கருவிலுள்ளது உருகொள்ளப் பயப்படுகிறது

பாவம்
சின்ரெல்லா
படபடப்பில்.

தொட்டதெல்லாம் பாழ்...,
கண்டதெல்லாம் பாழ்....,
சொன்னதெல்லாமும் பாழ்....,

சீமந்தம்!
சொந்தபந்தம்!!!

கன்னத்தில் சந்தனம்

கண்ணீர் வற்றியக் கண்களில் மிரட்சி

அரற்றுவோறும்
மிரட்டுவோறும்.

சின்ரெல்லா
மருத்துவமனைக்கே விரைகிறாள்
பிரஷர் 200ஐத் தாண்ட...

“நானாவது
மனிதனாகப் பிறக்கவேண்டும்”
சிசுவின் லப் டப்.
இப்போதைக்கு அதுதான் அதன் சபதம்.

அம்மாவின் 200ஐ குறைக்க.


அரியநாச்சி
16.11.2012