Sunday, November 20, 2011

கோமாளியின் மரணம்


நீண்ட பெருமரங்களுக்கிடையே ஊர்ந்து போகும் சனத்திரள் ஒரு காலகட்டத்தில் பேருந்துகளிலும் விமானங்களிலும் பறந்தக்கூட்டம். பெருமைகளெல்லாம் தவிடுபொடியாகும் கனவுகள் போல வாழ்க்கையை பக்கம்பக்கமாக பிரித்துவாசித்துக்கொண்டிருக்கும் போது நம் துன்பங்களின் சாயல்கள் அடர்வண்ணத்தில் பிரகாசமாக இருந்தும் நம் பார்வை அதைக் கடந்துதான் போகிறதே ஒழிய அதை உற்றுப்பார்த்து அர்த்தம் அறிந்து வாழ்க்கைப் பாதையை சரிசெய்துகொள்ள சோம்பல்ஒழிப்பதே இல்லை.

ஒவ்வொரு கதையும் சூனியத்திலிருந்துதான் தொடங்குகிறது. குறைந்தபட்சம் முதல் பக்கத்திலிருந்து. ஆனால் கதையைக் கடைசி வரியிலிருந்து பின்னோக்கி நகர்த்தும் போது கல்லறையிலிருந்து யாரோ எழுந்து ஊரை நோக்கி ஓடுவது போல் தோன்றும். அல்லது உண்மையிலேயே அப்படியொரு சம்பவம் நடக்கவும் செய்யலாம். இனி இந்த இடத்திலிருந்து பின்னோக்கி நகரும் காலம் வரும். வருகிறது. ஏறியவர்கள் இறங்குவது போல. இறங்கியவர்கள், ஏக்கத்தால், ஊரைப்பார்த்து ஆக்ரோசமாக சப்தம்போட்டு தான் செய்த சத்தியத்தால் குடிசைக்குள் ஒடுங்கி, உள்ளுக்குள் தீயை ஏற்றியேற்றிக் கபகபவென எரிந்து, சொன்னதை அடைய பரபரப்பாகக் கண்ணைமூடி ஏறுவதுபோல. ஏறி உச்சிக்குச் சென்றதும். முடிந்தது கதை.

என் மழிக்காத தாடிக்குள்ளிருந்து பேன்களைத் தவிர்த்து பெயர்தெரியாத வண்டுகள் வருவதும் போவதுமாக இருக்கும்போது, காடு அழிந்தது..., கதை முடிந்தது என யார் சொன்னது? இதோ இங்கே ஒரு கோமாளி எண்ணிலடங்கா உறைந்த எண்ணங்களோடு சமயத்திற்கு ஒத்துப்போகாத தன் பாழுணர்வினை அவசியமற்ற நேரங்களில் வெளிப்படுத்திவருகிறான்,

என் அருகே.

தொலைக்காட்சிச் சேனல்கள் ஏதாவதொரு வகையில் அவனைக் காட்டிக் காட்டி காசு பார்த்தபடி இருக்கிறது. காலையில் துயில் எழுப்பும் பாடல்கள் மலையேறிவிட்டது. பல மைல்கள் பல நாட்கள் ஏதாவதொரு ரூபத்தில் புலன்களின் ஏதாவதொன்றின் தொடர்போடு அவனைப் பற்றியப் பிரக்ஞையோடு பயணம் செய்தபின் இப்போதுதான் அவன் சிரிப்பதைப் பார்க்கிறேன். விநோதமானச் சிரிப்பு. அவனைப் பார்த்தாலே சிரிப்புவந்தக் காட்சிகள் எதிலும் பார்க்கமுடியாத சிரிப்பு. புற்களைப் பார்த்து பற்களைக் காட்டிச் சிரிக்க வேண்டிய அவசியம் இல்லைதான். இருந்தாலும் மனிதர்களைப் பார்த்துச் சிரித்தபோதுமட்டும் என்ன சாதித்துவிட்டான்? அதனால் புற்கள் அவனுக்கு புரியும் ஒன்றாக நெருக்கமான ஒன்றாக இருக்கிறது.

ஒருமுறை புல் அவனைக் கேட்டது,

”உன்னை ஆள்பவர்கள் யாரென்று தெரியுமா?”

புல்லுக்கு பதில் சொன்னான்.

“தெரியாது” என்பவனோடு என்ன வாதம் இருக்கப்போகிறதென புல்லோடு புல்லாக வளைந்து, நெளிந்து, முறுக்கி, மடக்கி, மறைந்துபோனேன்.

பஸ் நிறுத்தம் வந்தேன்.

ஆடுமாடுகள் லாரிகளில் ஏறிக்கொள்ள கோழிகளும், முயல்களும், ஈமுக்கோழிகளும் பஸ்ஸூக்குள் ஓடிச்சென்று ஸீட் பிடித்துவிட்டன. ஓட்டுனருக்கு அருகே கம்பியைப் பிடித்துக் கொண்டேன். என்னை ஒரு வாத்து இருக்கமாகக் கட்டிக்கொண்டது. சன்னல் காற்று அதன் ஈரலைச் சுட்டெரித்ததாம். அந்த நோஞ்சான் கோமாளி, நகர்ந்துகொண்டிருந்த பஸ்ஸைப் பிடிக்க பல்டியடித்து தாவி பின்புற ஏணியில் தொத்திக்கொண்டான். பிடிமானம் கிடைத்துவிட்டதால் சினிமாவிற்கு போன் கொடுத்தான். ”ஓரங்......” என இழுத்து அழுதது பிரபல்யமாகிவிட்டது. தொந்தி பெருக்க பெருக்க வாய் அகண்டது. உட்கார்ந்ததுபோக நிறைய நாற்காலிகள் காலியாகவே விடப்பட்டது, அவனுக்கே அசதி நீங்கி இடத்தை மாற்றிக்கொள்ளும் வரை.

நட்பு வட்டத்தின் ஆரம் விரியவிரிய அவனது கவனிப்பு தூரத்திற்கப்பால் புகையாக ஒளிந்திருந்தக் கூட்டத்தில் ஒருவன் அவனுக்குப் பொரியை வீசிவிட்டு கால்பரப்பிக் கறித் திண்றான். நோஞ்சானின் பணம் அதைக்கண்டு மணத்தது. மினுமினுத்தது, தொந்தி சடேரென சிறுத்ததாகத் தோன்ற, பணத்தைக் குனிந்து எடுத்தான், அதற்காகவே காத்திரு்நத வேவுக்காவல் நண்பன் உடனே எதிரியாக தன் கேரக்டரை மாற்றிக்கொண்டு எழுந்துநின்றான். தேடிக்கொண்டிருந்த கட்சி எதுவென்று தெரிந்துவிட்டது. அவனது பிராது கோர்டில் செல்லுபடியாகாது போல் இருக்க, உள்ளதும் போய்விடுமோ என்ற பயத்தில் கோமாளி வேசத்தோடு வெற்றி பெறும் தொனியிலிருந்த அந்தக்கட்சியோடு கண்ணை மூடிக்கொண்டு கைகோர்த்து எதிர்கட்சியை தெருத்தெருவாகச் சென்று கேவலமாக பேசிவிட்டான்.

இப்போது எதிர்க்கட்சி வெற்றி பெற்றுவிட்டதால். இப்போது கோமாளியின் அடிவயிற்றில் புகை கசியத் தொடங்கிவிட்டது.

கஞ்சையோ, கூழையோ குடித்துவிட்டு சும்மா கிடந்திருந்தாலும் கிடந்திருப்பான். அரசியல் தன் ஆட்டுரலில் அவனையும் அள்ளிப்போட்டுக்கொண்டு ஓதுக்கி ஒதுக்கி அரைக்கிறது இப்போ. எதிர்கட்சியின் ஆட்டுரலுன்னா சும்மாவா... உடனே மசிந்துவிட்டான், கோமாளி. வீட்டுக்குள்ளேயே ஒரு மூளையில் குத்திட்டு உட்கார்ந்து செல்போன்று ச்சார்ஜ் போட்டு ச்சார்ஜ் போட்டு ஒத்த அழைப்பிற்காகக் காத்திருக்கிறான். காலில் விழ. மன்னிப்புக் கேட்க.