Sunday, January 13, 2013

மைனஸ் ஒன்று (-1)



மரணத்தைக் காணாதவரை புத்தன் ராஜாதான்.

பார்வையிலிருந்த நூலாம்படையை நரம்புக்கும் நூலுக்கும் குழப்பமானமுறையில் சிக்கியிருந்த மரணத்தை முரட்டுக் கரங்களால் திசையின் ஒவ்வொரு கோணத்திற்குமாகப் பிய்தெறிந்தபின் கண்களைத் தேடி அலையும் பாடலின் வரியைப் பற்றிக்கொள்கிறது மனம். 

அடுத்தச் சொல்லின் நேர்குறுக்குச் சிதைவுக்குள் பொருளையும் மடக்கி மடக்கி அர்த்தங்களின் அர்த்தத்திற்கும் அநர்த்தத்தின் சாயலைப் பொத்தி வைத்து, வாழ்க்கையை வாரிச்சுட்டி மோப்பத்தை வெறியேற்றுகிறது மரணம்.

அப்பா எப்போதும் போல் தூங்கிக் கொண்டிருக்கிறார். 90 வயதைத் தொட்டிருக்கலாம், ஜூன் வரை இருந்திருந்தால். 

கணக்கின் முழுமையால் உடல் படபடக்கிறது. ஐயோவெனக்கூவ வெட்கப்பட்டுக் கர்ச்சிப்பால் கண்ணீரை அவமானத்தோடு தொட்டுத்தொட்டு நினைவுகளைப் பிழிகிறேன். உடன்பிறந்தார், உற்றார் உறவினர், நண்பர்குழாம், காக்கைகளும் குருவிகளும், இரண்டு நாய்களும், பூனையுமாக ஊதுபத்தி மனத்தில் குழந்தைகள் விளையாட்டும் விளையாட்டில் கூச்சலில் அவர் மறந்துவிட்டுப்போன குரல் சேர்ந்து விளையாடிப் பூச்சாண்டிக் காட்டிக்கொண்டே இருந்தது, 

தலையில் சில்லென்றக் குடத்து நீர் மொத்தமாக என்னைக் கழுவிக்கடந்தது.

முழுதுமாக நனைந்துவிட்டேன்.
12.01. 2013

இனி ஒரு பொழுதும்
மரணம் 
என்னை ஒன்றும் செய்யாது.

எங்கள் வீட்டின் முதல் மரணம்.

மைனஸ் ஒன்று (-1)

அப்பா