Thursday, December 13, 2012
பெயர் ஏற்காமல் போனவன்
Friday, December 7, 2012
கறந்தபால் மடிபுகா
Friday, November 16, 2012
சின்ரெல்லாவுகுச் சீமந்தம்
திரட்சிக்கொள்ளும் வெளி
யாருமற்ற வானில்
எங்கும் பிள்ளைகள்
சின்ரெல்லா
16.11.2012
Wednesday, June 20, 2012
Wednesday, January 4, 2012
ஒரு சிறுகதை நாடகமாடுகிறது

(ஆனந்தவிகடன், 4.1.2012 வெல்கம் 2012 ஸ்பெஷல் இதழில் வெளிவந்த திரு.தாமிரா அவர்கள் எழுதிய “நாடகம்”என்ற சிறுகதை பற்றி)
கட்டற்ற உலக உணர்வுகளை நடிகர்களின் குரல் அதிர்விற்கு மாற்றி அரங்கப்பொருட்களோடு இயைந்த ஒரு நிகழ்வில் கதையின் பெரும்பரப்பை இரத்தமும் சதையுமாகக்கோர்த்து, பார்வையாளர்களுக்கு விருந்து படைக்கும் நாடகக்கலைஞர்களின் வாழ்க்கை, முடிவிலாப் போர்க்கள அனுபவம். வயதானாலும் கனத்தப் போர்வாளை நடுங்கியபடியே தூக்கிப்பிடித்து எதிரியை வீழ்த்த முயற்சித்துக்கொண்டே இருப்பவர்கள்.
நாடகம் போடும் இடமும், அதைப் பார்க்கக்கூடும் பார்வையாளர்களின் நிலையும், தரமும், எண்ணிக்கையும் என பல்வேறு காரணிகளால் அந்த கலைஞனுக்குக் கிடைப்பது என்ன என்றக் கேள்வியை உங்களது மேசைமீது வைத்துவிடுகிறேன்.
அதையெல்லாம் தாண்டி, இந்தக் காலத்திலும் ஒரு கலைஞன் வாழ்கிறான் எனும்போது கான்கிரீட் நெறுக்கத்திற்குள் அதிசயப் பூவாக அவனைக் கருதவேண்டும். இந்த உணர்வை வெறும் கற்பனையாகவே நமது கதைகளிலும் ஏக்கங்களிலும் காண்கிறோம், நிஜமாக நம்முன் நம்மோடு இருக்கும்போது மயக்கதில் கடந்துபோய்விடக்கூடாது என்பதற்காவே இது.
தெருத்தெருவாக பள்ளிக்கூடம் பள்ளிக்கூடமாக நாடகத்தைப் போட்டு குழந்தைகளை மகிழ்வித்து துணிக்குல்லாவில் விழுந்த சில்லரைகளில் இருந்து தனக்கும் தன் நாடகக்கூட்டாளிகளுக்கும் வயிர் நிறைத்து, அரங்கப்பொருட்கள், பேப்பர், புத்தகம், பேனா, சதா உறவுக்கும் எழுத்தாள நண்பர்களுக்கும் எழுதும் கடிதங்களுக்கு என அனைத்தையும் பார்த்துக்கொண்டு வாழ்க்கையை கொண்டாட்டமாக வாழ்ந்த புதுவை பல்கலைக்கழகத்தின் முதுகலைப் பட்டதாரி, வேலுசரவணன். இப்போ ஒரு பல்கலைக்கழத்தில் நாடக ஆசிரியர். வைகவி, லவா எனும் இரண்டு அன்பான, குழந்தைகளின் தந்தை, வேலுசரவணனைக் கைகோர்த்த நாள் முதற்கொண்டு பயணமும், பயமும், ஏழ்மையும் மனதை வாட்டியபோதெல்லாம் வெளிக்காட்டாமல் வாழ்ந்து வேலுவையும் அவரது இரண்டு குழந்தைகளையும் மதிப்போடும் மறியாதையோடும் வளர்த்துவரும் அருமைச் சகோதரி முத்துலட்சுமி, என நம்மோடு வாழும் வேலுசரவணன் இதுவரையிலான பார்வையாளர்களின் கற்பனைக்களத்தில் மனதை வருடும் இனிய அனுபவமாக இருக்கிறார்.
அவரது நாடகங்களைப் பார்த்துக் களித்துவளர்ந்த குழந்தைகள் இப்போ பெரியவர்களாகி திரு.தாமிரா எழுதிய “நாடகம்“கதையை வாசித்துக்கொண்டிருக்கிறார்கள். வேலுமாமாவின் குல்லாவில் படிந்துள்ள தூசுகளைத் தட்டியபடி.
நமது பைட் பைப்ப்பர் இந்த ஆயிரமாயிரக் குழந்தைகளுக்குக் கதைச் சொல்லி அவர்களின் மனதைப் புரிந்துகொள்ளாமல் பொருட்களால் நெறுக்கி முடக்கி, உறைய வைத்திருந்த பெரியவர்களிடமிருந்து தப்பிக்க வைத்துக் கடல்பூதக் கதைக்குள் “ஏஹேய்....“ சொல்லி படகோட்டும் குழந்தைகளாக்கி ஏழு கடல் தாண்டும் கற்பனையைப் பெறுபவர்களாகியிருக்கிறார்கள். அந்தக் குழுந்தைகளின் நம்பிக்கையைக் கொல்வதென்பது ஆபத்துதான்.
திரு.தாமிரா அவர்கள் தமது முகநூலில், ”இந்தக் கதையை வேலுசரவணனிடம் விவாதித்திருக்கிறேன். கதாநாயகனின் பெயரை தன் பெயராகவே இருக்கட்டும் என்றும் கதைக்காகப் போடும் படம் தன்னைப் போல இருக்கட்டும்” என்று வேலுசரவணன் கேட்டுக்கொண்டதாகவும் என்று எழுதுகிறார். அவருடைய பக்கத்திலிருந்து பார்க்கும் போது அவர் வேலுவின் ஒப்புதலின்றிப் போடவில்லை தான் என்று தெரிகிறது.
பிரபலமானவர்களின் உருவங்களை செருப்பிலும் பனியன்களிலும் படமாக போட்டு வியாபாரம் செய்த கம்பனிகளுக்கு எதிர்ப்பு வந்தது நினைவிற்கு வருகிறது.
பலரின் நம்பிக்கைக்குப் பாத்திரமாக இருப்பவரைப் பற்றியான அபிப்பிராயங்களை மாற்றியமைக்க முயற்சிக்கும் போது “சம்பந்தப்பட்டவரே ஒப்புக்கொண்டார் உனக்கென்ன“ என்று செல்வது சொல்பவரையும் சொல்லப்படுபவரையும் தாண்டி இருவரையும் வளர்க்கும் பார்வையாளர்களின் கண்களில் அமிலத்தைத் தெளிப்பது ரசிப்பதற்குச் சமம்.
இருந்தாலும் ஏன் இதுபோன்ற ஆரவாரத்திற்குள் மக்களை அள்ளிப் போட்டுக் குத்திப் புடைக்கிறார்களோ தெரியவில்லை. சமூகத்தின் மூச்சையடைக்கும் இதுபோன்றப் புழுதியில் எதை உறிஞ்சித் திண்ணப்போகிறார்கள். வேலுசரவணனைத் தெரிந்தவர்களும், திரு.தாமிரா அவர்களைத் தெரிந்தவர்களும், இருவரைத் தெரிந்தவர்களும், இருவரில் எவரையும் தெரிந்திராமல் வெறும் 22 ரூபாய் ஆனந்தவிகடனுக்குச் செலவழித்து இந்தக் கதையைப் படித்தவர்களும் என அத்தனைப் பேரையும் இவர்கள் ஏமாற்றுகிறார்கள்.
இந்த இருவரைப் போலத்தான் பலர் உலகின் அமைதியை கொந்திக் கொண்டிருக்கிறார்கள். இது ஒரு புது இசமாகவே உருவாகிறதோ என்னவோ?
பிதுக்கல்கள், குமட்டல், அறுவறுப்பு போன்ற மறைக்கப்படவேண்டிய துர்விஷயங்களை பட்டவர்த்தனமாக்குவது நாகரிகம் என்றால்....! அதனால் பொது ஒழுக்கும் அவசியம் தேவை. நீ குளிக்கிறாயோ இல்லையோ, அடுத்தவர் அருகில் வரவேண்டுமானால் குளித்துவிட்டுத்தான் வரவேண்டும். சாக்கடைக்குள் கைவிட்டு சந்தனத்தை எடுத்து என்ன பயன். இதுபோன்ற கரடுமுரடான அனுபவங்களை மக்கள் நிறையவே அனுபவித்துவிட்டார்கள். நாமும் பல ஆயிரம் வருடங்களாக வாழ்ந்து வருகிறோம். ஒருவர் மாற்றி ஒருவர் கதைசொல்லி கதைசொல்லி இப்போதைய நாகரிகத்தை அடைந்திருக்கிறோம். இடையே சில சிந்தனையாளர்கள் எல்லாவற்றையும் கலைத்துப்போட்டு சீட்டுக்கட்டாக மீண்டும் மீண்டும் மாற்றிமாற்றி அடுக்கினார்கள். இறுதியாக அமைதியும், சாந்தமும், இனிமையும் தான் இலக்காக நிற்கிறது. இனிமையான விசயங்களுக்காக உலகம் ஏங்கிக்கொண்டிருக்கிறது. அமைதியான காலத்தை அனுபவிக்கத் தவிக்கிறது. ஒவ்வொரு நொடியும் மனித மனம் அனுபவிக்கும் துன்பம் உக்கிரமாகிக் கொண்டே இருக்கிறது. நமது வாழ்க்கை இப்படியாக இருக்க, ஒரு நாடகக் கலைஞனின் ஒப்பற்ற வாழ்க்கையைத் திண்ணத் துடிக்கும் - எதையும் திண்ண லாயக்கற்ற மிருகங்களின் சகிக்கமுடியாதக் குதறல்களெல்லாம் கலை என்றால் இந்த உலகம் துப்பாக்கிக்குண்டில் அடங்கிடட்டும். யாரைவேண்டுமானாலும் சுட்டுவிட்டு தானும் தவிடுபொடியாகட்டும்.
அந்த குழந்தை நாடகக் கலைஞன் நல்லவனோ கெட்டவனோ, எங்கள் குழந்தைகள் அவனை மிகவும் நேசிக்கிறது. அவருடைய நாடகத்தைப் பார்த்து வளர்கின்றன. அவருடன் நடிக்கிறது. என் குழந்தையைப் போல் உங்கள் குழந்தைகளுக்கும் நல்ல அபிப்பிராயம் இருக்கும். அதனால் அவரை குடிகாரன் என்று சொல்லாதீர்கள். அவர் குடித்தாலும். பெண்களோடு சுற்றுபவன் என்று சொல்லாதீர்கள் அப்படித் தான் சுற்றுகிறார் என்றாலும். புதுவை மற்றும் தமிழகத்தில் பெரும்பாலான பள்ளிகளில் நாடகம் போட்டிருக்கிறார். நீங்கள் படமாக எடுத்தால் அந்தக் குழந்தைகள் (இப்போதைய பெரியவர்கள்) தான் பார்க்கப்போகிறார்கள். அப்போ உங்களது ”நாடகம்” கதை என்ன விளைவை ஏற்படுத்தும்? அவர்களது நம்பிக்கையை கீறும். சின்னாபின்னமாக்கும். அவர்கள் இதுவரை காத்துவந்த அழகிய பிம்பங்களை உடைக்கும். இதுவொன்றும் கட்டுடைப்பு அல்ல. குழந்தைகள் உங்களிடம் வந்து “வேலுமாமா குடிகாரனா?” என்று கேட்கும். அதற்கு பதில் சொல்லவேண்டிய கட்டாயத்தில் நீங்கள் இருப்பீர்கள். அல்லது ஒவ்வொரு முறை சாப்பிடும்போதும் குழந்தை பயத்துடனே சாப்பிட நேரிடலாம். சாப்பாட்டில் விஷம் இருக்குமோ என்ற பயத்தில். வண்டியில் வர பயப்படலாம், வழியில் தள்ளிவிட்டுவிடுவீரோ என... இது ஒரு முடிவிலா பட்டியல்.
நாடகங்களைப் பார்த்தக் குழந்தைகளில் எத்தனை பேர் இந்த ஆனந்தவிகடனை வாசித்திருப்பார்கள். இருபத்திரண்டு வருட நாடகப் பயணம். வேலுசரவணனே சொன்னாலும் கூட அவனது வாழ்க்கை அவனது வாழ்க்கையாக பதிவு செய்யப்படுமேயன்றி சினிமாவுக்காக ஆண்மையற்றவன், குடிகாரன் என்று இட்டுக்கட்டுவது நல்ல கதையாகவோ, படமாகவோ ஆகாது.
”நாடகம்” கதையில் ”வேலு”, ”குழந்தைகள் நாடகக்காரன்” என்ற இரண்டு சொற்களையும் எடுத்துவிட்டுப் படித்தால் கதையின் கணம் மாறிவிடும். அந்தக் கதையை உள்ளூர்காரனும் படிக்கட்டும், வெளியூர்காரனும் படிக்கட்டும். கருத்தைக் கேளுங்கள். சிறிது நேரத்திற்குப் பின் நீக்கியச் சொற்களை மீண்டும் அந்தந்த இடங்களில் சேர்த்துப் படித்தால் அதன் பொருளே வேறு. முன்புபோல் உள்ளூர் வெளியூர் விதியைப் பயன்படுத்தி கருத்தைக் கேட்டுப் பாருங்கள். நிறைய வித்தியாசம் இருக்கும். இந்த வித்தியாசமே, அடுக்களையில் வைக்கவேண்டியது எது, வரவேற்பரையில் வைக்கவேண்டியது எது, பூஜை அறையில் வைக்கவேண்டியது எது அல்லது கழிவறையில் வைக்கவேண்டியது எது என்பதைச் சொல்லும்.
வேலுசரவணனைத் தெரியாத ஊரில்கூட இந்தக் கதை செல்லுபடியாகாது.
பல கதை(லை)கள் அப்படித்தான் கூரை ஏறி கோழி பிடிக்காமுடியாமல் வானம் ஏறி இருக்கிறது. பாராட்டியவர்களின் “போல் பாராட்டுப் பத்திரங்கள்” நீண்டிருக்கிறது.
நாடகம் உலகம் வேறு சினிமா உலகம் வேறு. மேடையில் தினம் தினம் ஓடியாடித் தாவிக்குதித்து இருபது வருடங்கள் தொடர்ந்து மேடையைச் சுற்றிச்சுற்றி வருகின்ற நடிகன்.
வேலுசரவணனை நன்கு தெரிந்த ஆனந்தவிகடன் (வேலுசரவணனே ஒப்புக்கொண்டாலும்) நல்லவற்றை மட்டும் வெளியிடுவது என்னைப் போன்ற ஆனந்த விகடன் வாசிப்பவர்கள் மனதைப் புன்படுத்தாது என்று நம்புகிறேன்.
அரியநாச்சி



