மரணம்,
ஆழ்கடல் முத்தொன்றில்
மறைந்துவாழும்
வஸ்த்து.
இடவலமாகச் சீட்டுக்கட்டில்
இடம்மாறி உட்கார்ந்ததும்
ரம்மி சேர்ந்து
ஆட்டத்தை முடித்துவிடும்
உயிர்.
அடுத்த ஆட்டத்திற்கு
அடுத்த ஆள்
யார்க்கும்
மறுவாய்ப்புக் கிடையாது.
சுற்றி அழுவோரின்
கதறலுக்கிடையில்
இசையொன்றுப் பிரவாகிக்கும்.
பெருந்தாய்
ஆத்திரார்த்திரமாக மாரடித்துக்கொள்ளும்
தாலாட்டு
நானும்
பெருங்கிளையொன்றிலிருந்து
மொட்டவிழாச் சிறுதளிராய்த்
தரைக்குத் தாழ்வேன்.
ஏந்தியக் கரங்களுள்
வெப்பம்
என் மனசெல்லாம்
கன்னிப்போன காயங்கள்.
பகிர்ந்துகொள்ள
உன்னையன்றி
இனி
தாயையும்
அணுகமுடியாத நடுக்கம்
அம்மா!
வாழ்ந்திருந்தால்
ஏதோவொரு கவிதையில்
நல்லவொரு சொல்லாக
வரையப்பட்டிருந்தால்
மனதை வருடும்
வண்ணக் கீற்றாக
வாய்ப்பறுந்து கிடக்கிறேன்
நான் அண்டச் சராசரத்தை ஆளும் வஸ்தாகிறேன்
வங்கக்கடலுக்கிடப்பட்ட மையாக
விஷநீலம் மையிருளில்
நிறப்பிறழ்வின்
குழப்பத்திலேயே
உங்கள் எல்லோருக்கும்
உலகப்பெயரேற்காதப்
பொய்யாகி
அர்த்தமற்றக் கனவாய்க் கலைகிறேன்
நான்
சின்ரெல்லாவின்
சிசு.
12.12.12
(இந்த நாளைப்போல் திரும்பவராதக் காலமாகிறேன்.)

