இருகுருவிகளின் இறகுதிரும் இசை ஒரு ரயில் தடதடக்கும் இசையாய், மெல்லக்
கனவாகவும், மௌனம் உடைபடுகிற பேரொலியாகவும் நாகர்கோவில் குளிர்காற்றில் பஸ் ஏறி புதுச்சேரிக்குள்
அலைந்து திரிந்த காலத்தில் பக்கங்கள் இலக்கியமாகிடும் வாழ்க்கை நெடுக கலை வாசற்கதவைத்
தட்டிக்கொண்டே இருந்த ஒலியோடு இயைந்துவிட்ட இரண்டு குருவிகளும் கோட்பாட்டுக்கனவில்
கைகோர்த்தக் காதல் எதிரெதிர் இருக்கையில் இப்போ… ஆனால் ரயில் போகும் திக்கு என்னவோ
இரண்டுக்கும் ஒன்றுதான். மௌனம் ரயில் முழுக்க எதிரொலித்தது, அதிர்ந்தது. மௌனத்தின்
எதிரொலி ஆழ்மனக் கிணற்றில் இருந்த அத்தனைப் பதிவுகளையும் தெளிவாகக் கண்முன்கொண்டுவந்து
நிறுத்தியது உலகமொழிகளில் இல்லாத புதிய ஒலியில் யார்க்கும் புரிந்திராக அர்த்த அதிர்வில்
தனக்குத்தானே.
கோட்பாட்டு ரயில் இப்போ ஜங்சனில் நிற்கிறது. நீரும் கரியும் நிரப்பும்
நேரத்திற்குள் எல்லாவற்றையும் முடித்துக்கொண்டு இறங்கிவிடவேண்டும். இரண்டு குருவிகளும்
ஆளாளாக்கு தம் சேமிப்புகளையெல்லாம் காகிதங்களில் விளையாடவிட்ட வார்த்தைகளின் சோர்வுக்கு
இடைவெளிகொடுக்காமல் சதா யோசித்து யோசித்து ஒவ்வொரு ஞாபக மறதியையும் பொய்யாக்கிக் கொண்டு
வந்து தரவிறக்கம் செய்துவிடுகின்றன இரண்டும். ஒன்றுக்கொன்று சலைக்காமல்.
‘உனது இந்தப் பதிவால் ஒருபோதும் எதுவும் செய்துவிட முடியாது. ’
பெண் குருவி, எழுதிரிக்க முடியாமல்.
ஈனத்தில் மனங்குன்றிய வேகமே வெற்றியென இருந்தவரின் முகவாட்டம்,
வாழ்க்கையின் அத்தனை அனுபவத்தையும் சருகாய் ஊதிவிளையாடுகிறது அவர் ஈன்ற சந்ததிமொத்தமும்,
அவரைச் சுற்றி. அருகில் சென்று பொறுமையாக விளக்க முயற்சிக்கிறார். பட்டாம்பூச்சிகள்
பறந்துவிடுகின்றன. ‘காத்திருப்பு’ அவற்றிற்கு இன்னும் அறிமுகமாகாத பழக்கம். மரமேற அவர்
நினைத்தவர் மரங்களை வழிநெடுக நட்டதுதென்னவோ அப்போ! எப்போவேண்டுமானாலும் ஏறிக்கொள்ளலாம்
என்றது உரத்தக் கேட்கிறது இப்போ! சரசரவென்று அவர் எண்ணம் கிளைகள் பல தாவி சந்ததியின்
நெஞ்சுக்கூட்டைப் பிளந்து பார்க்கிறது. அங்கே பொங்கிய அரிசியும், பொங்கா பழங்களும்
குழைந்து ஏப்பம் உற்பத்தியாகும் சப்தத்தில் குழம்பிப்போய் திறந்த இதயத்தை மூடாமல் திறந்தகண்களோடு
கிளைகளூடாக விடைகளைத் தேடுகிறார்கள், உணர்வறியும் அனைத்து புலன்களையும் தொடர்புகொள்ளாமல்.
பட்டாம்பூச்சிகள் வெயில் ஏறியதும் பறந்துபோய்விடுகிறது. மாயமரம் காற்றில் கலந்துவிடுகிறது.
கிளையில் கனவு கண்டிருந்த மனமும் உடலில் ஒடுங்கிவிடுகிறது.
கடைசி பெட்டியிலிருந்து அடுத்தப் பெட்டியிலிருப்பவருக்கு ரகசியசெய்தி
அனுபவதாக எழுதிய காகிதங்களை அனுப்பிக்கொண்டே இருந்தால் எங்கு போகும்? காற்று பலமாக
அடிக்கிறது. சாற்றிய கதவின் வழியாக அவரால் எகிறிக்குதித்தும் போகமுடியாது, சாவியை ச்செக்கர்
எப்போதோ எடுத்துப்போய்விட்டார். எழுதிக்கொண்டே இருக்கிறாரே. அது யார்க்காக? தனக்காகவா.
தானே அதை எற்கிறோமா என்று கவனிக்கவேண்டாமா?
இப்போ அந்த மாபெரும் மனம் கனத்தை இறக்கிவைக்க ஆசைப்படும் போது அவற்றையெல்லாம் ஏற்றுக்கொள்ளவேண்டியது
யாருமில்லை. திரு.மீராவின் நிழலில் உலகைச் சுற்றிவந்த உள்ளங்கள் அனைத்தும் தான். வயோதிகத்தால்
மட்டும் பிடிவாதம் அதிகமாவதில்லை. கருத்துக்களில் வைத்திருக்கும் நம்பிக்கை பொய்யாகவேண்டிச்
சுற்றி நின்று கேலிசெய்து சீர்கெடுக்கும் முகங்களின் வக்கிர வார்த்தைகளால் தான் எதிர்நிற்கத்
துணிகிறேன். அதே பழைய கட்சிக்காரனாக. அந்தக் கட்சியும் இப்போ புதுரத்தம் பாய்ந்து,
சோசலிசம் பேசுகிறது பாசிச முகமூடியை யார் கண்ணுக்கும் தெரியாதவகையில் கண்டுபிடித்து
மாட்டிக்கொண்டு. கொஞ்சம் காங்கிரஸ் நெடியோடும்.
பிரபலங்கள் என்பது ஒருவரைச் சுற்றியிருக்கும் மனிதர்களின் எண்ணிக்கையில்
அல்ல, வெளியே சொல்லாமல் உள்ளேயை வைத்திருக்கும் ஒருத்தரின் உன்னதமான உறவுதான் பிரபலம்.
கூட்டங்கூட்டமாக வந்துபோன இலக்கிய வாதிகள் வயிராறிய இ(ம)டம் திரு.மீராவின் மனம். அந்த
பறவைகளுக்கு வேறெங்கும் தங்குவதற்கான லகு இருந்ததில்லை. அது அந்த ஸ்டீல்லைட்ப் பிதாவிடம்
தான் இருந்திருக்கிறது. கட்சியும், கலையும் தன் வியர்வையால் வளர்த்த இடைநில்லாப் போராளி.
வயோதிகத்தின் விளிம்பில் நின்றுகொண்டு கடந்துவந்தப் பாதையைப் பார்க்கும் கண்களுக்குள்
புறையோறி இருப்பதால் பதிவாகியிருக்கும் காட்சிகளில் கலர் மங்கியிருக்கலாம், கருத்துத்
தொலைந்திருக்கலாம் அல்லது நினைவு பிறழ்ந்திருக்கலாம், ஆனால் அவரின் மனம் எடுத்துவைக்கும்
ஒவ்வொரு ஞாபகங்களும் ஒரு உணர்வைச் சொல்ல முயன்றிருக்கிறது. அதில் புன்படும் விசயங்கள்
நிறைய விரவியிருந்தாலும், இவர் இப்போ அன்போடு அரவணைக்கத்தக்கக் குழதையாகிறார், அவர்க்கு
அந்திப்பெற்றோர்களாக ஒப்பனை செய்துகொள்பவர்களாக மாற, உறவுகள்.
அன்பிற்கினிய திரு.மீராவின் மௌனம் உடைபடும் வேளையில் அவர் கனவின்
ஒரு பகுதி நிறைவேறுவதால் யார்க்கு இடறாக இருந்தாலும் என் குழந்தையின் சின்னஞ்சிறிய
தவற்றை பெருமிதமாகப் பேசுவதால் தான் நான் ‘அப்பா’. இதையே திருப்பிப்போட்டு அர்த்தம்
எடுத்தால், ‘மகன்/மகள்’ எனவும் பொருள்கொள்ளும்.
வாழ்க்கையை இலக்கியமாக்குபவர்களும் இருக்கிறார்கள். இலக்கியமாக
வாழ்பவர்களும் இருக்கிறார்கள். தராசின் முள் இப்போ நடுவில் இருக்கிறது. யாரும் அசைத்துவிடாதீர்கள்.
கணக்கு தப்பாகிவிடும்.
அரியநாச்சி
20.06.2012
குறிப்பு: இது ஒரு அலாதியான அனுபவமும், கற்பனையும், சமூக அக்கரையுமுள்ள
ஒரு தம்பதியருக்குள் நிகழ்வதாக வெளிபட்டக் கற்பனை. அந்த ரயில் இப்போ எந்த ஸ்டேஷனிலும்
நிற்காமல் போய்க்கொண்டே இருப்பதால் அவர்கள்
இருவரையும் யாரும் சந்திக்க முடியாது. அவர்களின் குரல்கள் தங்கிவிட்ட நிறுத்தங்களிலிருந்து
வார்த்தைகளைப் பொறுக்கி யெடுத்துக் கோர்த்து வைத்திருக்கும் இந்தப் பகுதியில் சொந்தக்
கற்பனை மட்டுமே இருப்பதால், கற்பனை என்று மட்டுமே ஏற்றுக்கொள்ளவும்.

No comments:
Post a Comment