Friday, November 16, 2012

சின்ரெல்லாவுகுச் சீமந்தம்

நெல் விளைந்த நிலம்
நீராகப் பரவியக் கடல்
உயிர்
திரட்சிக்கொள்ளும் வெளி

அப்போ,
யாருமற்ற வானில்
வட்டமாக, வெள்ளையாகச் சின்ரெல்லா.
கதிர், சூல்கொண்ட புதிர்.

ஒருமுறைத் திறந்துவிட்டால்
மூச்சில் தஞ்சம், உயிர்

அதிரும் உடலில்
படபடக்கும் நெஞ்சம்.
சுகரும் பிரஷரும்.

கருகொள்ளவும் மருத்துவமனை
பேறுவுக்கும் அங்கேயே
வீடென்பது வீடாகவா!?
கருவிற்கொரு இடமாகவா?!
உறவிற்கொரு இதமாகவா!?
சின்ரெல்லாவுக்கு மருத்துவமனை.

(சின்ரெல்லாவிற்கு, மஞ்சள் காமாளை, தைராய்டு, பிரஷர் என என்னென்னவோ சொல்கிறார்கள்.)

அழகில் மயங்கிய மாப்பிள்ளை
புதிதில் தடுமாறினாள், சின்ரெல்லா

இருவரும்
ஆண் பெண்,
பெண் ஆண்
அவ்வளவுதான்!

இடையில் புகுந்த நரிகளின் ஊளை
தூங்குமூஞ்சிகளின்
கண்களில் ஊளை.

எல்லாம் மறைக்கப்பட்டது
எதுவும் தென்படவில்லை.

சீமந்த நெறுக்கடியில்
பெண் வீட்டார்
மாப்பிள்ளை வீட்டார்
அங்கே
இங்கே
எங்கும் பிள்ளைகள்

வளர்ந்தப் பெருசுகளின்
வளராதப் பெருந்தன்மை

பணம் துரத்தும் பெருசுகளாய்
வாய்திறந்தலையும் ஓநாய்களாய்
எச்சில் தெரிக்கப் பேசிவிட்டு
நலுங்குக்கூட்டத்தில்
ஒரு ஊளைச் சப்தம்

கருவிலுள்ளது உருகொள்ளப் பயப்படுகிறது

பாவம்
சின்ரெல்லா
படபடப்பில்.

தொட்டதெல்லாம் பாழ்...,
கண்டதெல்லாம் பாழ்....,
சொன்னதெல்லாமும் பாழ்....,

சீமந்தம்!
சொந்தபந்தம்!!!

கன்னத்தில் சந்தனம்

கண்ணீர் வற்றியக் கண்களில் மிரட்சி

அரற்றுவோறும்
மிரட்டுவோறும்.

சின்ரெல்லா
மருத்துவமனைக்கே விரைகிறாள்
பிரஷர் 200ஐத் தாண்ட...

“நானாவது
மனிதனாகப் பிறக்கவேண்டும்”
சிசுவின் லப் டப்.
இப்போதைக்கு அதுதான் அதன் சபதம்.

அம்மாவின் 200ஐ குறைக்க.


அரியநாச்சி
16.11.2012

No comments:

Post a Comment